சென்னை: அதிமுகவில் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் நிர்வாகிகள், நடைபெற உள்ள தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்தால் மட்டுமே உரிய பதவியும் பொறுப்புகளும் கிடைக்கும் என அக்கட்சித் தலைமை கூறியதாகத் தெரிகிறது.
மாவட்டச் செயலாளர்கள், நடப்பு எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் ஓரிரு தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் கட்சி வெற்றிபெற உழைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்முறை 166 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது அதிமுக. தேர்தல் நடவடிக்கைகளைக் கடந்த ஓராண்டுக்கு முன்பே தொடங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி, பல்வேறு வியூகங்களை அமைத்துள்ளார்.
எனினும், சில நிர்வாகிகள் கட்சித் தலைமையின் உத்தரவை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கூட்டணிக் கட்சியினரைப் புறக்கணித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதைக் கவனித்த அதிமுக மேலிடம், எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் என்பதால் யாருக்கும் மீண்டும் பதவி வழங்கப்பட மாட்டாது என்றும் அதிக தொகுதிகளில் வெற்றியைச் சாத்தியமாக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்றும் நடப்பு நிர்வாகிகளிடம் அதிமுக சார்பில் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

