தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு; திமுக தொண்டர்கள் அதிர்ச்சி

2 mins read
556932e8-aa80-47bf-bacc-e0a85afa6b4d
பெண்கள் பற்றி அவதூறாகப் பேசியதால் கட்சிப் பொறுப்பிலிருந்து பொன்முடியை விடுவிப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

சென்னை: அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவியை திமுக தலைமை அதிரடியாகப் பறித்துள்ளது.

பெண்கள் குறித்து ஆபாசக் கருத்தை வெளியிட்ட அமைச்சர் பொன்முடியைக் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) அறிவித்தார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதுவைக் குறிப்பிட்டு மிகவும் கொச்சையான கருத்துகளைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது பேச்சின் காணொளி வேகமாகப் பரவிய நிலையில், சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

முன்னதாக, ‘எக்ஸ்’ தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்த கனிமொழி, “அமைச்சர் பொன்முடியின் அண்மைய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கெனவே, திமுக பொதுக் கூட்டத்தில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளைப் பேசி பொன்முடி சிக்கலில் சிக்கியிருந்தார்.

அப்போது, அவரது உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

“கழக சட்டதிட்ட விதி 17, பிரிவு 3ன்படி கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி.யை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்ச்சைப் பேச்சுக்கு துரைமுருகன் வருத்தம்

இதனிடையே, மாற்றுத் திறனாளிகளைச் சர்ச்சைக்குரிய சொல்லால் குறிப்பிட்டதற்காக திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை கருணை உள்ளத்தோடு ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று பெயரிட்டு அழைத்தார் கலைஞர். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

“கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவற்றைச் செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்