சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையதாக இல்லாததால் தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, கமல்ஹாசன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கக் கோரியதாகவும் திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் மட்டுமே தர இயலும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு எட்டு மணி அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார் கமல். அப்போது தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற கட்சியின் முடிவை ஸ்டாலினிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, மநீமவுக்கு ஒதுக்கப்பட இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் மநீம கட்சி உறுப்பினர்களுக்கும் தமக்கும் ஏற்புடையதாக இல்லை என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“டார்ச் லைட் சின்னத்துடனான மநீம கட்சித் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுபூர்வமானது. இந்தச் சின்னம் வெறும் சின்னம் அல்ல. அது எங்களின் அடையாளம்.
“ஆகவே, இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு நிபந்தனை இன்றி ஆதரவு அளிப்போம்,” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதனிடையே, கமல் செய்திருப்பது உண்மையிலேயே பெரிய தியாகம் என்றும் அவரது முடிவு தம்மை நெகிழ வைத்துவிட்டது என்றும் முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

