அரியலூர்: நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவையை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூரில் தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களைத் தொடங்கி வைத்தார்.
“கிராமப்புறப் பொருளியலை மேம்படுத்துவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் கால்நடைகளைப் பராமரித்திடவும் மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது,” என்று தெரிவித்தார் அமைச்சர்.
அதன் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தமிழக முதல்வரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த வாகனங்கள் கால்நடை சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற நவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியில் இருப்பர். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒதுக்கப்பட்ட கிராமத்தில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள், கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளும். பிற்பகலில் அழைப்புகள் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சைப் பணிகளை மேற்கொள்ளும்.
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவோர்1962 என்ற கட்டணமில்லா பிரத்யேக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். கால்நடை மருத்துவ வாகனங்கள், கால்நடை சிகிச்சை முகாம்கள், கால்நடை தடுப்பூசி முகாம்கள், கால்நடைப் பராமரிப்பு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு முகாம்களிலும் செயல்படுத்தப்படும்.