தஞ்சாவூர்: தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்கப் பயிற்சி அளித்து வரும் 55 வயது தமிழ் பண்டிதர் மணி. மாறனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் 124வது அத்தியாயத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) பேசிய மோடி, தமிழ் ஓலைச்சுவடிகளையும் பண்பாட்டையும் பாதுகாப்பதிலும் பிரபலப்படுத்துவதிலும் தனிமனிதராக மணி.மாறன் மேற்கொண்டு வரும் முயற்சியைப் பாராட்டினார்.
“இன்றைய தலைமுறை தமிழ் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கக் கற்றுக்கொள்ளாவிட்டால், விலைமதிப்பற்ற இந்தியாவின் அறிவுசார் கலாசார பாரம்பரியம் எதிர்காலத்தில் இழக்கப்படும் என்பதை உணர்ந்து அவர் செயல்படுகிறார்,” என்று மோடி கூறினார்.
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகரான மணி. மாறன், தமிழ், வரலாறு, சமஸ்கிருதம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவுகொண்டவர். வரலாற்று நோக்கில் தமிழிலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
“தமிழர்களின் மரபு, பண்பாடு, கலை தொடர்பான செய்திகள் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகளை உலகிற்குத் தெரியப்படுத்த ஓலைச்சுவடி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,” என்று கூறுவதுடன் அதைச் செயல்படுத்தியும் வருபவர் மணி. மாறன்.
இவரது முயற்சியில் சரஸ்வதி மஹாலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்குச் சுவடிகளைப் படிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு வகுப்புகள் தொடரப்படவில்லை.
என்றாலும், தனிப்பட்ட முறையில் வேலை முடிந்து மாலையில் ஆர்வம் உள்ளவர்களுக்குச் சுவடியியல் பயிற்சி வழங்கி வருகிறார் மணி. மாறன். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர்.
“இந்தியாவை பொறுத்தவரை 35 லட்சம் ஓலைச்சுவடிகள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். சுவடி இலக்கியத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட சுவடிகள் தமிழ்ச் சுவடிகளாக உள்ளன. இந்தச் சுவடிகள் சரஸ்வதி மஹால் நூலகம், உ.வே.சாமிநாத ஐயர் நூலகம், தஞ்சாவூர்த் தமிழ் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற பல நிறுவனங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“படிக்கப்படாத சுவடிகள் ஏராளம். ஓலைச்சுவடிகளில் மருத்துவம், இலக்கணம், இலக்கியம், கணிதம், வானியல் சாஸ்திரம் என்ற பலதுறைகள் சார்ந்த செய்திகள் உள்ளன. இவை வெளிவர, சுவடி படிப்போர் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். இந்த ஆர்வத்தை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான், ஓலைச்சுவடி படிக்கப் பயிற்சி வழங்கி வருகின்றேன்,” என்று மணி.மாறன் கூறினார்.