கைப்பேசிச் செயலி மூலம் பண விநியோகம்: கண்காணிக்க உத்தரவு

கைப்பேசிச் செயலி மூலம் பண விநியோகம்: கண்காணிக்க உத்தரவு

படம்: தினமலர்

18 Mar 2026 - 3:56 pm

2 mins read

சென்னை: கைப்பேசிச் செயலி மூலம் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி ஊழியர்களுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, இத்தகைய பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘ஜிபே’, ‘ஃபோன்பே’ உள்ளிட்ட பல்வேறு கைப்பேசிச் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையடுத்து, சென்னை வங்கிகள் தங்கள் கிளைகளில் நடக்கும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்டத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக எந்தவிதப் பரிவர்த்தனையும் இல்லாத வங்கிக் கணக்குகளில் திடீரென ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை வரவு வைக்கப்பட்டாலோ எடுக்கப்பட்டலோ அதைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் வேளையில் பல்வேறு நூதன முறைகளைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் பண விநியோகத்தில் ஈடுபடுவதை அடுத்து, தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கை அவசியம் என ஆணையம் கூறியுள்ளது.

தனிநபர் கணக்குகளில் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளிலும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தினாலோ அல்லது பணம் எடுத்தாலோ அது தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்து உரிய புகார்கள் அளிக்காத நிலையில், தேர்தல் பணியில் இருக்கும் அலுவலர்கள் முறைகேட்டைக் கண்டறிந்தால், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, விருதுநகரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையை அடுத்து, கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம், நகைகள், விலையுயர்ந்த பொருள்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல் ஆணையம்பணப் பரிவர்த்தனைவிருதுநகர்கைப்பேசி