சென்னை: பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களை வகைப்படுத்தி, அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பணியைத் தமிழகக் காவல்துறை தொடங்கியுள்ளது. இதற்காக ‘ஸ்பெக்ட்ரம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் திங்கட்கிழமை (ஜூன் 29) நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், சட்டம், ஒழுக்கு பிரச்சினை தொடர்பாக சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றார்.
தமிழகத்தில் ஏற்கெனவே ரவுடிகளும் கொடூரக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களும் குற்றங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறார்கள். இதன்மூலம் குற்றச்செயல்கள் குறையும் எனக் காவல்துறை கருதுகிறது.
இதேபோல் ‘ஸ்பெக்ட்ரம்’ திட்டத்தின்கீழ் பாலியல் குற்றவாளிகளும் கண்காணிக்கப்பட உள்ளனர்.
சிவப்பு, ஆரஞ்சு, நீலம், கறுப்பு, ஊதா, இளஞ்சிவப்பு, பச்சை, வெள்ளி ஆகிய வண்ணக் குறியீடுகள் அடிப்படையில் குற்றவாளிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக, பாலியல் குற்றவாளிகளின் விவரக் குறிப்பு தயாரித்தல், மதிப்பீடு, வகைப்படுத்தல், கண்காணிப்பு, ஆபத்து பகுப்பாய்வு, ஒருங்கிணைந்த கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின்கீழ் அதிக ஆபத்துள்ள குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்த முடியும் என்றும் குறிப்பிட்ட குற்றவாளிகளை மட்டும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 15,000 பாலியல் குற்றவாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
‘ஸ்பெக்ட்ரம்’ என்பது (Colour-Coded Sexual Offender Tracking and Monitoring System) பாலியல் குற்றவாளிகளின் பின்னணி, அச்சுறுத்தலின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டு, உளவுத்துறை சார்ந்த ஒரு தரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை என்றும் இதன்மூலம் காவல்துறையின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி பாலியல் குற்றங்களைத் தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

