சென்னையில் பறவைக் காய்ச்சலால் 1,000க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு

சென்னையில் பறவைக் காய்ச்சலால் 1,000க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு

1 mins read
af270ac3-c25b-4419-a8c1-942c2f67f591
சென்னையில் பறவைக் காய்ச்சலால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், கிருமித் தொற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. - படம்: சமயம்டிவி

சென்னை: சென்னையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன.

பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் ஜனவரி மாதம் 150க்கும் மேற்பட்ட காகங்கள் ஏவியன் இன்ப்ளூயன்ஸா எனப்படும் எச்5என்1 (H5N1) வைரஸ் எனப்படும் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது.

தற்போது சென்னையில் அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான காகங்கள் பறவைக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளன.

பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பறவைகளைத் தொட வேண்டாம் என்றும், பறவைகள் உயிரிழந்து இருப்பதைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உயிரிழந்த கோழி உள்ளிட்ட பறவைகளை, சுகாதாரத்துறையினரின் வழிகாட்டுதலின்படி, எரிக்க வேண்டும் அல்லது ஆழக் குழியில் புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

கோழிகள், பறவை காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியை நன்கு வேக வைத்து உண்ணுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இத்தொற்று, பறவை இனங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து கிருமி எளிதில் பரவும்.

பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்படும்.

குறிப்புச் சொற்கள்