திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருநூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதி இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மரங்கள் எரிந்ததற்கு சதிவேலை ஏதும் காரணமல்ல என்பது உறுதியானது.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ளது ராஜவல்லிபுரம் கிராமம். இங்குள்ள பழமைவாய்ந்த செப்பறை திருக்கோவிலுக்கு தாமிரபரணி ஆற்றங்கரையோரம், பல ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.
இந்நிலையில் திங்கட்கிழமையன்று (ஜூலை 14) மாலை ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
இதனால் அப்பகுதி தீப்பிழம்பாக மாறியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் ஒருமணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே தீயை அணைக்க முடிந்தது.
“காற்று பலமாக வீசியதால், கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த மரங்களுக்கு தீ பரவிவிட்டது. மொத்தம் 200 மரங்கள் முற்றிலுமாக எரிந்து போயின,” என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மின்மாற்றியில் இருந்து தீப்பொறி விழுந்து மரங்கள் தீப்பற்றி எரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.