கடலூர்: உத்தராகண்ட் மாநில நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கடலூர் ஆட்சியர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் ‘நியூஸ் 7 தமிழ்’ ஊடகத்திடம் தொலைபேசி வாயிலாக பேசியபோது தெரிவித்தார்.
ஆன்மீகப் பயணம் சென்ற அந்த 30 பேரும் அங்குள்ள ஆசிரமத்தில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 17 பெண்கள் உட்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்மீகத் தலங்களுக்கு கடந்த 1ஆம் தேதியன்று சுற்றுலா சென்றனர்.
தொடர்ந்து அங்கிருந்தபடி வேன் மூலமாக அனைத்துத் தலங்களையும் சுற்றிப் பார்த்து வந்தனர்.
இதனிடையே, உத்தராகண்டில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஆன்மீகச் சுற்றுலா சென்ற 30 பேரும் அங்குள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு வேனில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஆதிகைலாஷில் இருந்து 18 கி.மீ.தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் கடந்த ஆறு நாள்களாக அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் அவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கைப்பேசி மூலம் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்ய செந்தில்குமாரைத் தொடர்புகொண்டு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கடலூர் ஆட்சியர் செந்தில்குமார், உத்தராகண்ட் மாநிலம், பித்தோரகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு 30 பேரையும் மீட்டு பாதுகாப்பாகத் தங்கவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சூழலில், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினர், ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்15) நிலவும் வானிலையைப் பொறுத்து அவர்கள் அனைவரையும் ஹெலிகாப்டர் மூலம் கடலூருக்கு அனுப்பி வைப்பதாக பித்தோரகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக கடலூர் ஆட்சியர் செந்தில்குமார் கூறியுள்ளார்.
“உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
“அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தியுடன் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி சனிக்கிழமை நால்வர் உயிரிழந்தனர்.

