சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பயன்பாட்டிற்கு தேவைப்படாத தங்க நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றி அவற்றை வங்கியில் முதலீடு செய்யும் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ஏறத்தாழ 34 கிலோ தங்க நகைகளை உருக்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் 34 கிலோ 375 கிராம் எடையுள்ள தங்க நகைகள் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நகைகளில் உள்ள கற்கள், அரக்கு, அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்ட பின்னர், அவை மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கப்பட்டு சுத்தமான தங்கக் கட்டிகளாக மாற்றப்படவுள்ளன.
இவ்வாறு உருக்கப்படும் தங்கம், பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின்கீழ் அந்தந்தக் கோயில்களின் பெயரிலேயே ‘டெபாசிட்’ செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இதுவரை 21 முக்கியக் கோயில்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பயனற்ற நகைகள் உருக்கப்பட்டு, 1,074 கிலோவிற்கும் அதிகமான தங்கக் கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 17 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வட்டியாகக் கிடைக்கிறது.
இந்தத் தொகையானது அந்தந்தக் கோயில்களின் புனரமைப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

