காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மோவூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கயல்வேந்தன். அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (29). இவர்களுக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், கயல்விழி வீட்டின் படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தார். அவரது கையில் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து காணப்பட்டன. அவர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கயல்விழியின் மாமனார், மாமியார் தெரிவித்தனர்.
ஆனால், “கயல்விழி உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்,” என கயல்விழயின் தந்தை வீரமுடையான் நத்தத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம், தாய் மகாலட்சுமி ஆகியோர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். அதில் தனது மகளை அவரது மாமனார் செங்குட்டுவன், மாமியார் பானுமதி ஆகியோர் கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், அவர்கள் தனது மகளை அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான நான்கு ஆண்டுகளில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.