10 ரூபாய் நோட்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்த ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளர்

10 ரூபாய் நோட்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்த ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளர்

2 mins read
7045ee4b-2e18-438c-ad2b-476054ea559f
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன். - படம்: தினமணி

கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை (மார்ச் 30) தொடங்கியுள்ள நிலையில், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன், 10 ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் டெபாசிட் தொகையாகக் கட்டி நூதன முறையில் மனுதாக்கல் செய்தார்.

தேர்தலை நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு வந்த பேரறிவாளன், தனது வைப்புத் தொகையான 10,000 ரூபாய் முழுவதையும் 10 ரூபாய் நோட்டுகள், நாணயங்களாகக் கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அவருடன் வந்திருந்த கட்சியினர் பேரறிவாளனின் முகமூடியை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்தனர்.

மனுதாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், திமுக, அதிமுக வேட்பாளர்களைக் கடுமையாகச் சாடினார்.

“கோவை தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் ஊழல், பண முதலைகள். செந்தில் பாலாஜிக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். வாக்குக்குப் பணம் கொடுக்காமல், இலவசங்கள் வழங்காமல் என்னை விட ஒரு வாக்கு அதிகம் வாங்கினால்கூட, நான் பொது வாழ்க்கையை விட்டு விலகி திமுகவிலேயே இணைந்து விடுகிறேன்.

“செந்தில் பாலாஜி மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெற்று ஊழல் செய்தார். அந்த 10 ரூபாய் அவருக்குப் பெரிய உறுத்தலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் வைப்புத் தொகையை 10 ரூபாய் நோட்டுகளாகக் கட்டியுள்ளேன்.

“நான் அவர்களைப் போல கோடீஸ்வரன் அல்ல, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தத் தொகுதியில் போட்டி எனக்கும் செந்தில் பாலாஜிக்கும்தான்.

“செந்தில் பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றால், கோவையில் டாஸ்மாக் கடைகளைவிட ‘11 டூ 11’ மதுபானக் கடைகள்தான் அதிகம் வரும்.

“பெருந்தலைவர் காமராஜரையே ஓர் இளைஞன் தோற்கடித்த வரலாறு உண்டு. அதேபோல் ஊழல் செய்த செந்தில் பாலாஜியை மக்கள் வீழ்த்துவார்கள்,” என்று அவர் கூறினார்

தமிழகத் தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ள நிலையில், கோவையின் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்