நாகப்பட்டினம்: இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் போக்குவரத்ததை வலுப்படுத்தும் விதமாக இயக்கப்பட்டு வரும் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கான கட்டணம் ரூ.5,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் மாதத்திற்கான சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலவசப் பயணப் பொதி அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கூடுதல் எடைக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
நாகை துறைமுகத்திற்கும் இலங்கை யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையே ‘சுபம் ஃபெர்ரி’ நிறுவனம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இச்சேவையை வழங்கி வருகிறது.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஆறு நாள்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன்பெற்று வருகின்றனர். ஆன்மிகம், சுற்றுலா, வணிகம் சார்ந்து ஏறக்குறைய 55,310 பயணிகள் இக்கப்பல் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.6,000ல் இருந்து ரூ.5,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நாகையிலிருந்து காங்கேசன்துறை செல்ல பெரியவர்களுக்கு ரூ.5,500 (இலங்கை ரூ.19,250 / US$58) குழந்தைகளுக்கு ரூ.5,000 (இலங்கை ரூ.17,500 / US$53) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து நாகை வர ‘ப்ரீ எகானமி’ வகுப்பில் பெரியவர்களுக்கு ரூ.6,000, குழந்தைகளுக்கு ரூ.5,500 வசூலிக்கப்படும். இலவசப் பயணப் பொதி வரம்பு 10 கிலோவிலிருந்து 30 கிலோவாகவும், கைப்பை வரம்பு 7 கிலோவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 30 கிலோவுக்கு மேலான கூடுதல் எடைக்கு 5 கிலோவுக்கு ரூ.1,500, 10 கிலோவுக்கு ரூ.2,500, 30 கிலோவுக்கு ரூ.6,000 எனத் திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு 110 பயணிகளும், மறு வழியில் 150 பயணிகளும் பயணம் செய்ய முடியும்.
வானிலை எச்சரிக்கை விடுக்கப்படும் நாள்களைத் தவிர்த்து, மற்ற நாள்களில் வழக்கம்போல் கப்பல் இயங்கும். கடந்த ஆண்டைப்போல மழைக் காலத்தில் சேவை நிறுத்தப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையே குறைந்த செலவிலும் அதிக உடைமைகளுடனும் பயணம் செய்ய விரும்புவோருக்கு நவம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வந்துள்ள இப்புதிய சலுகை நல்வாய்ப்பாக அமையும் என்று கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்தது.
