கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் பெருமிதம்

பெரியார், கலைஞருக்கு கிடைக்காத வாய்ப்பைப் பெற்றவர் நல்லகண்ணு

2 mins read
073d173b-a6e6-4fce-af16-7c2808a8b061
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில், “தோழர் இரா. நல்லகண்ணு 100 - நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்” என்ற நூலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நடைபெற்றது.

விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இரா.நல்லகண்ணுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்ததுடன் ‘நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

பெரியார், கலைஞருக்கு கிடைக்காத வாய்ப்பு தோழர் நல்லகண்ணுக்கு கிடைத்துள்ளது. 100 வயதைக் கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். உயர்நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு என்று ஸ்டாலின் போற்றினார்.

“பொதுவுடைமை, திராவிடம், தமிழ் தேசிய இயக்கம் ஒன்றாக இணைந்து விழா எடுத்துள்ளன. இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல் வாழ்ந்து வருகிறார் நல்லகண்ணு. உழைப்பால் கிடைத்த பணத்தையெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார்,” என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கியதையும் தாம் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியதையும் நினைவுகூர்ந்த ஸ்டாலின், அவ்விருதுகளின் பரிசுத் தொகையைக்கூட நல்லகண்ணு தமிழக அரசுக்கு திருப்பி அளித்து விட்டதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

“பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர் நல்லகண்ணு.

“கட்சிக்காகவே உழைத்தார். உழைப்பால் வந்த பணத்தை கட்சிக்காகவே கொடுத்தார். அதனால்தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்.

“12 வயதில் போராட்டக்காரனாக உருவாகி, 15 வயதில் பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு அவர் வாழ்ந்த தியாக வாழ்வு எப்படிப்பட்டது? தலைமறைவு வாழ்க்கை - சிறைச்சாலைகளில் சித்திரவதை - கட்டி வைத்து சாலையில் போட்டு அடித்தார்கள் - சிகரெட்டால் சுட்டார்கள் - மலை உச்சிக்கு தூக்கிச் சென்று போட்டுவிடுவோம் என்று மிரட்டினார்கள்… இதற்கெல்லாம் அஞ்சினாரா? விடுதலை உணர்ச்சியை விட்டுவிட்டாரா? இல்லை, விடாது உழைத்தார்! அந்த நெஞ்சுரத்தால்தான் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களை நான் பெருமையோடு குறிப்பிடுகிறேன்,” என்று அவரது சிறப்புகளை ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

திராவிட இயக்கத்துக்கும் பொது உடைமை இயக்கத்துக்கும் ஆன அரசியல் நட்பு இடையிடையே விட்டுப்போய் இருக்கலாம். ஆனால் கொள்கை நட்பு எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் தொடரும். அது தொடரக்கூடியது என்று அவர் கூறினார்.

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கக்கூடிய சிறப்புப் பாடலையும் ஸ்டாலின் வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்