தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த அறிஞர் என ஸ்டாலின் பாராட்டு

தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நாராயணன்

3 mins read
986e025e-4436-4008-ba74-f675fb941116
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் 11வது தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது முதல் லட்சியமாகும் என்று திருவனந்தபுரம் வலியமாலை திரவ உந்துவிசை இயக்க திட்ட தலைவராக இருக்கும் வி.நாராயணன் கூறினார்.

இந்திய விண்வெளி மைய (இஸ்ரோ) தலைவரான சோம்நாத் அடுத்த வாரம் ஓய்வு பெறுவதையடுத்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) வி.நாராயணன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரபூர்வமாகப் பதவியேற்பார்.

இஸ்ரோவின் தலைவர், விண்வெளித் துறையின் செயலாளர் ஆகிய இரு பதவிகளை ஏற்பதுடன் விண்வெளி ஆணையத் தலைவராகவும் இவர் செயல்படுவார்.

ஈராண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இப்பதவிகளை வகிப்பார் என்று மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அறிவித்துள்ளது.

இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை. தந்தை வன்னியபெருமாள், தாய் தங்கம்மாள். மாதவன் நாயர், கே.சிவன் ஆகியோரை அடுத்து வி.நாராயணன், குமரி மாவட்டத்தில் இருந்து இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் 3வது தமிழர்.

படிப்பு, விருதுகள்

இவரது தந்தை ஒரு சிறு வியாபாரி. கீழக்காட்டூர் அரசு பள்ளியில் தமிழில் படித்தவர்.

இந்தியாவின் மிக முக்கியமான கல்லூரிகளில் ஒன்றான கோரக்பூர் ஐஐடி-யில் பட்டதாரியான நாராயணனின் கல்விப் பயணம் வியக்க வைப்பது. 1989ல் க்ரையோஜெனிக் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற நாராயணன் தனது வகுப்பில் முதலிடம் பெற்றார். 2001ல் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஐ.ஐ.டி கோரக்பூரில் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி அறிவியல் சங்கத்தின் (ASI) தங்கப் பதக்கம், ராக்கெட் தொழில்நுட்பங்களுக்கான ASI விருது, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) தேசிய வடிவமைப்பு விருது உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

தலைவர்கள் வாழ்த்து

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன், அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்தவர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியந்து போற்றியுள்ளார்.

“தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோ-வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை,” என்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பாராட்டியுள்ளார்.

“நாராயணின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும். நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.

சந்திரயான் சாதனையாளர்

இஸ்ரோ அறிஞரான முனைவர் வி.நாராயணன் சந்திரயான்-3  விக்ரம் லேண்டருடன். 
இஸ்ரோ அறிஞரான முனைவர் வி.நாராயணன் சந்திரயான்-3 விக்ரம் லேண்டருடன்.  - படம்: இந்திய ஊடகம்

சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளானதையடுத்து பிரச்சினையைப் பகுப்பாய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு குழுவுக்குத் தலைமை தாங்கி, தீர்வைக் கண்டறிந்தவர்தான் வி.நாராயணன்.

இவரது வழிகாட்டுதலில், சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர், ரோவர் ஆகியவற்றின் வடிவமைப்பு, செயல்பாட்டு அம்சங்களில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் விளைவாக, சந்திரயான்-3 திட்டத்தில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகச் சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கி, உலகிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.

ராக்கெட், விண்கலம் உந்துசக்தி துறையில் பரந்த அனுபவம் கொண்ட நாராயணன், 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார். இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டுகால அனுபவமுள்ள இவர், இஸ்‌ரோவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

உலகிலேயே 6 நாடுகளில் மட்டும்தான் காம்ப்ளக்ஸ், உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் அமைப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் வி.நாராயணன்.

இஸ்ரோவில் தமிழர்கள்

கடந்த 2023ல், தமிழக அரசு இஸ்ரோ விஞ்ஞானிகள் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், மு.வனிதா, வீரமுத்துவேல், நிகார் ஷாஜி ஆகியோரை பாராட்டி சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தது.
கடந்த 2023ல், தமிழக அரசு இஸ்ரோ விஞ்ஞானிகள் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், மு.வனிதா, வீரமுத்துவேல், நிகார் ஷாஜி ஆகியோரை பாராட்டி சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தது. - படம்: இந்திய ஊடகம்

இஸ்ரோவில் தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ‘ரோகிணி-2’ செயற்கைக்கோளை ஏவிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ராக்கெட்டுக்களுக்கான திட எரிபொருள் ஆராய்ச்சியில் ஆற்றிய பங்கு முக்கியமானது.

இவரைத் தொடர்ந்து சந்திரயான்-1, மங்கள்யான் செயற்கைக்கோள்களுக்கான திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார்.

ஜிசாட்-12 பணியின் திட்ட இயக்குநராக ந.வளர்மதி, இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவன், பதவிக் காலத்தில்தான் முதன்முதலாக சந்திரயான் நிலவுக்கு அனுப்பப்பட்டது. சந்திரயான் - 2 பணியின் திட்ட இயக்குநராக வனிதா முத்தையா பணியாற்றினார்.

குறிப்புச் சொற்கள்