தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியாயமான விசாரணை வேண்டும்: தவெக கோரிக்கை

2 mins read
ddd16012-a4ef-431f-9309-1e15eb3d97df
கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழக்க நேரிட்டது.  - படம்: ஊடகம்

புதுடெல்லி: கரூர் துயரச் சம்பவம் குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தரப்பையும் சாராத விசாரணை வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும் மாநில அரசின் விசாரணைக் குழு மீது நம்பிக்கை இல்லை என்றும் தவெக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழக்க நேரிட்டது. இதுகுறித்து தமிழக அரசு பொதுநல விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுகிய தவெக, சிபிஐ விசாரணை கோரி மனுதாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) தொடங்கிய நிலையில், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் அங்கிருந்து உடனடியாக விஜய்யை வெளியேறுமாறு காவல் அதிகாரிகள் கூறியதால்தான் விஜய் கிளம்பிச் சென்றதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

“சம்பவ இடத்தில் விஜய் இருந்தால் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்பதால்தான் அவரை உடனே கிளம்புமாறு காவல்துறை அறிவுறுத்தியது.

“மேலும், பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க தவெகவினர் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால் இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை வேண்டும்,” என்றும் தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

எனவே, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழுவை உச்ச நீதிமன்றமே அமைக்க வேண்டும் என்றும் தவெக தரப்பு கோரியது.

இதனிடையே, விஜய்க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கருத்துக்களை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவும் வியாழக்கிழமை விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் இடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரித்தது ஏன்? ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்? என நீதிபதிகள் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என்றும் கருத்து தெரிவித்தனர்.

தேர்தல் பிரசார நெறிமுறை தொடர்பான வழக்கின் போது விஜய் பற்றிய கருத்துகளை உயர்நீதிமன்றம் முன்வைத்தது ஏன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

முன்னதாக விஜய்யும், அவரது கட்சி நிர்வாகிகளும் தலைமைத்துவ பண்பு இல்லாதவர்கள் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்