தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீட் தேர்வு மட்டுமே உலகம் அல்ல: மாணவர்களுக்கு விஜய் அறிவுறுத்து

2 mins read
1743f17c-d6f1-47b3-9dc6-5bb85dd45738
விஜய். - படம்: ஊடகம்

சென்னை: நீட் தேர்வு மட்டுமே உலகம் அல்ல என்றும் அதையும் கடந்து உலகம் மிகப்பெரியது என்றும் நடிகர் விஜய் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு பரிசுகளும் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கும் விழா சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் மே 30ஆம் தேதி நடைபெற்றது.

இதில் மாணவர்கள், பெற்றோர், தவெக நிர்வாகிகள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், படிப்பில் சாதிக்க வேண்டும் என்பதை தாம் மறுக்கவில்லை என்றும் அதற்காக ஒரேயொரு படிப்பில் மட்டும் நாம் சாதித்தே ஆக வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

“ஒரே விஷயம் குறித்து திரும்பத் திரும்ப யோசிக்காதீர்கள். அவ்வளவு மன அழுத்தம் அவசியமில்லை.

“நீட் தேர்வு மட்டும்தான் உலகமா... நீட்டைத் தாண்டி இந்த உலகம் மிகப் பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அதனால் இப்போதே உங்கள் மனதை பலமாக வைத்துக் கொள்ளுங்கள்,” என்றார் விஜய்.

ஜனநாயகம் என்று ஒன்று இருந்தால்தான் உலகில் உள்ள அனைத்து துறைகளும் சுதந்திரமாக இருக்க முடியும் என்றும் முறையான ஜனநாயகம் இருந்தால்தான் எல்லாருக்கும் எல்லாமும் சரிசமமாகக் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

“உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் ஜனநாயகக் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என வலியுறுத்துங்கள்.

“2026 தேர்தலில் வண்டி, வண்டியாகக் கொண்டு வந்து பணத்தைக் கொட்டப்போகிறார்கள். அத்தனையும் உங்களிடம் கொள்ளையடித்த பணம். என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்.

“சாதி, மதத்தை வைத்துப் பிரிவினை ஏற்படுத்தும் சிந்தனை பக்கம் சென்றுவிடாதீர்கள். விவசாயிகள் என்ன சாதி, மதம் பார்த்தா பொருளை விளைய வைக்கிறார்கள். தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்தா பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். இவ்வளவு ஏன், இயற்கை அம்சங்களான வெயில், மழையில் சாதி, மதம் இருக்கின்றனவா?

“போதைப் பொருள்களைப் போல் சாதி, மதத்தையும் தூரமாக ஒதுக்கி வைத்துவிடுங்கள். இந்த உலகத்தில் எது சரி எது தவறு என்பதை பகுப்பாய்வு செய்து பார்த்தாலே போதும், ஒரு குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கை வாழலாம்.

“தொழில்நுட்ப, அறிவியல்பூர்வமாக சிந்தியுங்கள். ஏற்கெனவே வந்துவிட்ட ‘ஏஐ’ போன்ற தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்கு அதுதான் ஒரே வழி,” என்றார் விஜய்.

இதனிடையே நீட் தேர்வு குறித்து விஜய் பேசிய கருத்துடன் தாம் உடன்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்