சென்னை: சனாதன சக்திகளை நொறுக்கக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அனைவரும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என நடிகர் சூர்யாவின் ‘அகரம்’ அறக்கட்டளையின் 20ஆம் ஆண்டு விழாவில் பேசும்போது வலியுறுத்தினார்.
‘அகரம்’ அறக்கட்டளை வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறது. இதுவரை 6,000க்கும் மேற்பட்டோர் இவ்வாறு உதவி பெற்றுள்ளனர்.
இந்த அறக்கட்டளை இதுவரை 51 மருத்துவர்களை உருவாக்கி உள்ளதாக நடிகர் சூர்யா குறிப்பிட்டார். இதையடுத்து, அம்மருத்துவர்களில் சிலர், மேடையேற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் பேசிய கமல்ஹாசன், மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு குறித்து விமர்சித்தார்.
“அகரம் அறக்கட்டளை பல மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. ஆனால், அவர்களால் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இதனைச் செய்ய முடியவில்லை. ‘நீட்’ தேர்வை ஏன் எதிர்க்கிறோம் என்பது இப்போது புரிகிறதா?
“2017ஆம் ஆண்டு முதல் பெரும்பான்மையான மாணவர்களின் கல்விக்கனவை ‘நீட்’ தேர்வுச் சட்டம் கெடுத்துள்ளது. அப்படிப்பட்ட சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது,” என்றார் கமல்ஹாசன்.
மேலும், ‘அகரம்’ போன்ற தொண்டு நிறுவனங்களைத் தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் தாம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அதைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.