சென்னை: தவெக தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, தவெக தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணி அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை (ஜூலை 1) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.
தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து, முறையான கூட்டணியாக உருவாக்க வேண்டுமெனத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், கூட்டணிக்கு ஒரு பெயர் சூட்டி ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
அடிமட்ட அளவில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, கூட்டணிக்காகத் தாம் தேர்வு செய்து வைத்துள்ள பெயர்களை முதல்வர் விஜய் தெரிவிக்க, அவற்றுள் ஒரு பெயரை இறுதிசெய்வது தொடர்பாக ஆலோசனை நடந்தது.
அப்போது பேசிய திரு விஜய், தவெக அரசு மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் என்றும் லஞ்சம், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் உறுதியளித்ததாக இந்து தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தவெக ஆட்சி இரண்டு மாதங்கள்கூட நிலைக்காது என்று பலர் விமர்சித்ததாகக் குறிப்பிட்ட திரு விஜய், தமது அரசு ஐந்தாண்டுகள் நீடிப்பது உறுதி என்றார்.
ஆலோசனைக்கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர், தவெக கூட்டணிக்கென பொதுவான செயல்திட்டத்தை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.
விரைவில் நடைபெற உள்ள அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்படும் என்றும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

