விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கான செயலி அறிமுகம்

1 mins read
5a54927d-fb2c-4875-b96e-9d7f8962a627
மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக சுகாதாரத் துறைக்கான ‘விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி’ பயன்பாட்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இப்போது 113 மருத்துவமனைகளில் இந்தச் செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவற்றில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 5 அரசு சார்ந்த மருத்துவமனைகள், 31 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 41 துணை மாவட்ட மருத்துவமனைகள் அடங்கும் என்றார்.

இதுதொடா்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “அவசரகால நோய் மற்றும் இறப்பு விகிதங்களைக் கட்டுப்படுத்தி, தரமான அவசர மருத்துவ சிகிச்சையை வழங்குவதே தமிழ்நாடு அரசின் விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்புத் திட்டத்தின் நோக்கம்.

“இது கணினி மற்றும் தொலைபேசி இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

“நோயாளிகளுக்கு 108 அவசரகால ஊர்தி வாகனங்களில் வழங்கப்படும் ஆரம்ப சிகிச்சை முதல் மருத்துவமனையில் வழங்கப்படும் தொடர் சிகிச்சை வரையிலான அனைத்துத் தரவுகளும் இந்தச் செயலியில் ஒருங்கிணைக்கப்படும்.

“இந்தத் தரவு சேகரிப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சிறப்பான சிகிச்சையை வழங்கவும் வழிவகுக்கும்,” என்றார்வர்.

குறிப்புச் சொற்கள்