மயிலாடுதுறை: இந்திய அரசின் முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட புதிய கதவணையில் காவிரி நீரைத் தேக்கி வைக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் காலங்களில், தமிழகத்திற்குப் பெருமளவில் காவிரி உபரிநீர் வருகிறது. எனினும், மேட்டூர், முக்கொம்பு, கல்லணை போன்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீரைச் சேமிக்க முடிவதால், உபரி நீரின் பெரும் பகுதி கடலில் வீணாகக் கலக்கிறது.
இதைக் கட்டுப்படுத்தும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டும் என டெல்டா பகுதி விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடலூர் மாவட்டம் ஆதனூர்-மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் இடையே புதிய கதவணையைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.516 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2020ல் பணிகள் தொடங்கப்பட்டன. நில இழப்பீட்டுத் தொகையாக ரூ.52 கோடி வரை செலவிடப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இதற்கான கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன.
இருப்பினும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் முன்அனுமதி பெறாமல் இக்கதவணை கட்டப்பட்டதே தற்போதைய முடக்கத்திற்குக் காரணமாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2024 டிசம்பர் மாதத்தில்தான் இந்திய அரசின் ‘பரிவேஷ்’ (PARIVESH) இணையத்தளம் வாயிலாக இதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்ட நிலையில் அனுமதி கோரப்பட்டதால், இந்திய அரசிடம் இருந்து இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, பலநூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கதவணையில் நீரைச் சேமிக்க இயலாத சூழல் நிலவுகிறது.
ஆண்டுதோறும் காவிரி தண்ணீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டுபிடிக்கிறது.
தமிழகமும் ஒவ்வொரு முறையும் காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து தண்ணீரைப் பெற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், புதிய கதவணையைத் திறக்க முடியாதது டெல்டா விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

