தூத்துக்குடி: தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சீனா, வியட்நாம் வழியாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்குப் புதிய நேரடிச் சரக்கு கப்பல் சேவை முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.
‘ரீஜினல் கன்டெய்னர் லைன்’ (RCL) நிறுவனம் சார்பில் இயக்கப்படும் ‘எம்வி நவதா பூம்’ (MV Navatha Boom) என்ற முதல் சரக்கு கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது.
147.82 மீட்டர் நீளமும் 23.38 மீட்டர் அகலமும் கொண்ட, ஒரே நேரத்தில் 1,100 சரக்குப் கொள்கலன்களைக் கையாளும் திறன்கொண்ட அக்கப்பலை வஉசி துறைமுக அதிகாரிகளும் சரக்கு முனைய நிர்வாகிகளும் உற்சாகமாக வரவேற்றனர்.
புதிய கப்பல் சேவை சீனாவிலுள்ள கின்ஷோ (Qinzhou) துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, வியட்நாமின் ஹைபோங் (Haiphong) துறைமுகம் வழியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாக வியட்நாமின் சூலாய் (Chu Lai) துறைமுகத்தைச் சென்றடைந்து மீண்டும் கின்ஷோ துறைமுகத்துக்குத் திரும்புகிறது. சீனாவிலிருந்து வியட்நாமை அடைய 13 நாள்களும் அங்கிருந்து தூத்துக்குடி வர 12 நாள்களும் ஆகின்றன.
தற்போது வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் அச்சேவை, ஏற்றுமதி, இறக்குமதியாளர்களின் தேவையைப் பொறுத்து விரிவுபடுத்தப்படும் என வஉசி துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.
இப்புதிய சேவை மூலம் தெற்கு சீனா, வியட்நாம் இடையிலான கடல்வழி இணைப்பு மேம்படுவதோடு, சூரிய மின்தகடு உற்பத்தி, மின்சார வாகனப் பிரிவுகளுக்குப் புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.
மேலும், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் முக்கியச் சரக்குப் பெட்டக மையமாக தூத்துக்குடி துறைமுகம் உருவெடுக்க வழிவகுக்கும்.
