தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது புதிய வழக்கு

2 mins read
94c2307f-56f0-4fea-9764-89c9d638a52d
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 நவ.1, 7, டிச. 1 மற்றும் 2019 ஜன. 3, செப். 26, 2020 பிப். 14 ஆகிய தேதிகளில் புகார் அளித்திருந்தார். அதில், 2018ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.290 கோடி மற்றும் சேதமடைந்த சாலைகளைப் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.246.39 கோடிக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீதும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் பலர் மீதும் புகார் அளித்திருந்தார்.

இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து எஸ்.பி. வேலுமணி, மாநகராட்சி செயல் பொறியாளர் ஏ.எஸ்.முருகன், ஓய்வுபெற்ற கண்காணிப்புப் பொறியாளர் கே.சின்னசாமி, செயற்பொறியாளர்கள் பி.ஆர்.சரவண மூர்த்தி, வி.பெரியசாமி, வி.சின்னதுரை, ஏ.நாச்சன், மண்டல அதிகாரி டி.சுகுமார், கண்காணிப்புப் பொறியாளர் கே.விஜயகுமார், தலைமைப் பொறியாளர் எல்.நந்தகுமார், ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எம்.புகழேந்தி ஆகிய 10 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையில், ‘மணலுக்கு பதில் எம்.சாண்டைப் பயன்படுத்தி மழைநீர் வடிகால்வாய் அமைத்துவிட்டு மணலுக்கான தொகையைக் குறிப்பிட்டது, ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுக்கு சந்தை விலையைவிட அதிக தொகையைக் குறிப்பிட்டது உட்பட பல்வேறு வழிகளில் அரசுக்கு ரூ.26.62 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்