சென்னை: சென்னை அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளை அழைப்பதற்காக வாகனங்களுடன் வரும் குடும்பத்தார், அவர்களைச் சந்திக்கும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.22.88 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சந்திப்புப் பகுதி (பிக்கப் பாயிண்ட் பிளாசா) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இந்திய பொது விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு டெல்லியில் இருந்து காணொளி வசதிமூலம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) இதைத் திறந்து வைத்தார். விமான நிலைய முதலாவது முனையத்தின் தரைத்தளத்தில் இந்தப் புதிய பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை பயணிகள் வாடகைக் கார்களைப் பிடிப்பதற்கு முனையத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள அடுக்கு மாடி வாகன நிறுத்துமிடத்துக்குச் செல்ல இடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.
புதிய வசதிமூலம் முதலாவது முனையத்தில் இருந்து வெறும் 30 மீட்டர் தூரத்திலேயே பயணிகள் எளிதாக தங்களுக்கான வாகனங்களை அடைந்துவிட முடியும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பயணிகளின் நேரத்தைச் சேமிக்கவும் இந்தப் புதிய ஏற்பாடு பெரிதும் உதவும் என்றும் பயணிகள் முனையங்களுக்கு இடையே தடையின்றிச் சென்றுவர 15 பேட்டரி வாகனங்களும் நவீன டிராலிகளும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
அன்றாடம் ஏறக்குறைய 5,000 வாடகைக் கார்களை இந்தப் பகுதியில் கையாள முடியும் என்றும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் பயணிகளுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்றும் சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.

