கோவை: தமிழகத்தின் கோவை மாவட்டத்துக்கு மேலும் ஒரு பெருமை கிடைக்க உள்ளது. இந்தியாவில் 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்ற பெயரைப் பெறப்போகிறது கோவை.
கோவை, ஏற்கெனவே கல்வி நகரம் என்றுதான் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’.
15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களைக் கண்டறிந்து அடிப்படைக் கல்வியை அளிப்பதுதான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
இதன்படி தமிழக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், இந்திய அரசு பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து கோவையில் கடந்த ஆண்டு முதற்கட்டமாக ஆயிரக்கணக்கானோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் வெற்றிகரமாக தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது, இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் கோவையின் பல்வேறு பகுதிகளான மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பொள்ளாச்சி, சூலூர் மற்றும் வால்பாறை போன்ற இடங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் ஜூன் மாதம் ஏறக்குறைய 14 ஆயிரம் பேர் தேர்வெழுத உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களும் ஏற்கெனவே, 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மிக விரைவில் கோவைக்கும் அதேபோன்ற பெருமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

