ராமேசுவரம்: பாம்பன் ரயில் பாலத்துக்கு டாக்டர் அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுகுறித்து மத்திய அரசு முடிவு செய்யும் எனத் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது புதிய பாலப்பணிகளால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு மண்டபம் பகுதி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன எனக் குறிப்பிட்டார்.
“பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளை இரண்டாண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டிருந்தோம். எனினும் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக பணிகள் தாமதமடைந்தன.
“இப்போதுதான் பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. விரைவில் ரயில் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்ட பாம்பன் புதிய ரயில் பாலம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்,” என்றார் ஆர்.என்.சிங்.
அப்போது செய்தியாளர்கள் புதிய பாலத்துக்கு காலஞ்சென்ற இந்திய அதிபர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுமா எனக் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் எனப் பதில் அளித்தார் ஆர்.என்.சிங்.

