சென்னை: கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளக்கூடிய பசுமை வளத் துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மத்திய பகுதிகளுக்குத் தேவையான சரக்குகளைக் கையாளக் கூடிய வகையில் இது அமைய உள்ளது.
தமிழ்நாட்டின் பறவனாறு, உப்பனாறு ஆகியன கடலில் கலக்கும் இடத்தில் 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் துறைமுகத்தில் ரூ.159 கோடி செலவில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அண்மையில் கடலூரில் தற்போது உள்ள துறைமுகத்தை கிட்டத்தட்ட 50 ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியாருக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. ஏற்கெனவே தொடர் மண்மேடு காரணமாக துறைமுகம் செயலிழந்தது.
அத்துடன் தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகம் அருகே 500 மெகாவாட் திறன் கொண்ட கடலோரக் காற்றாலைகள் அமைக்கப்படும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளன.
அணு மின் நிலையம், அனல் மின்நிலையம் மட்டுமன்றி புகையை வெளியேற்றாத, இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மின்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் தமிழ்நாடு தீவிரம் காட்டி வருகிறது.