சென்னை: புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்கத் தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் 96 வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்கும் பணிகளுக்கான தமிழக அரசின் ஒப்பந்தப்புள்ளிக் கோரிக்கை திங்கட்கிழமை (நவம்பர் 2) வெளியாகியுள்ளது.
விருப்பமுள்ள நிறுவனங்கள் டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் இணையவழியாக ஒப்பந்தப்புள்ளியைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் ஏறக்குறைய 25 ஏக்கரில் சட்டமன்ற வளாகத்துடன் புதிய தலைமைச் செயலகம் அமையவிருக்கிறது.
அங்குப் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் எனத் தமிழக அரசு அறிவித்த நிலையில், அதற்கான 21.37 ஏக்கா் இடத்தை நிலவகைப்பாடு டாக மாற்றம் செய்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்திருந்தது. அதாவது, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக பட்டினம்பாக்கக் கடற்கரைப் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியம், மாநகராட்சிக்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
அந்த இடம் தற்போது பொதுப் பயன்பாடு, ஆதாரக் குடியிருப்பு மற்றும் நிறுவனப் பயன்பாடு என்ற வகைப்பாட்டிற்குள் இருக்கிறது. அவ்விடத்தில் தலைமைச் செயலகம் கட்டவேண்டுமெனில் அதனை முழுமையாக வணிகப் பயன்பாட்டிற்கானதாக மாற்றவேண்டும்.
அதனால், மாநகராட்சியும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்திடம் நிலவகை மாற்றத்துக்காக கோப்புகளை அனுப்பியிருந்த நிலையில், அதனை ஏற்று நிலவகைப்பாட்டை மாற்றிச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டது.
ஆனாலும், பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும் மாற்று இடத்தை தேர்வு செய்யும் நோக்கில் அரசு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது குடியிருப்புகளை அகற்ற ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
