சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (மே 11) பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக சபாநாயகர் கருப்பையா அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே, எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஏழு பேர் வரவில்லை. சேந்தமங்கலம் சந்திரசேகரன், காமாட்சி, சரவணன், சிவி சண்முகம், கே.சி.கருப்பண்ணன், உஷாராணி ஆகியோர் பதவியேற்காத நிலையில், அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழைக் கொண்டு வராததால் பதவியேற்க முடியாமல் போனது.
புதிய சபாநாயகராகிறார் ஜே.சி.டி. பிரபாகர்
இந்நிலையில், சட்டமன்றத்தின் சபாநாயகராக தவெக உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் ஜே.சி.டி. பிரபாகர் இடம்பெறுவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அவர் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட உள்ளார். செவ்வாய்க்கிழமை (மே 12) சட்டமன்றம் மீண்டும் கூடும்போது அவரது பெயர் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படும்.
எதிர்க்கட்சிகள் சார்பாக வேட்பாளர் களமிறக்கப்பட்டால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் மூலம் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தற்போதைய சூழலில் ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணக்கம் வைக்காத உதயநிதி
எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். அவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் முதல்வர் விஜய்க்கு வணக்கம் வைக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் வணக்கம் வைத்துவிட்டுச் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
பண்ருட்டி அதிமுக உறுப்பினர் மோகன் பதவியேற்கும்போது, பேரவையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு உடைந்து அழுதார்.
கட்சிப் புடவையில் பிரேமலதா
தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கட்சிப் புடவையில் வருகை தந்தார். பதவியேற்ற பின்னர் முதல்வர் இருக்கைக்கு அருகே சென்ற அவர் வணக்கம் தெரிவிக்க, முதல்வர் விஜய்யும் எழுந்து நின்று பதில் வணக்கம் தெரிவித்தார்.
சேலம் தெற்குத் தொகுதி தவெக எம்எல்ஏ பார்த்திபன் பேரவைக்குள் செல்லும் முன்பு, நுழைவாயிலில் தரையில் மண்டியிட்டு வணங்கிச் சென்றார்.

