திருச்சி: வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அலங்கார நுழைவு வளைவு திடீரென இடிந்து விழுந்தது. நல்லவேளையாக, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி குமார வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஏழாம் படை வீடு என்று சிறப்பித்துக் கூறப்படும் இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி இக்கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்காக வயலூர்- அதவத்தூர் சாலை நுழைவாயிலில் புதிதாக சுமார் 25 அடி உயரம், 70 அடி அகலத்துக்கு சிமெண்ட்டால் அலங்கார நுழைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் மேற்கொள்ளப்படும் இப்பணியில் 10க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) ஈடுபட்டு வந்தனர். பகல் 1 மணியளவில் சிமெண்ட்டால் ஆன அலங்கார நுழைவு வளைவு அடியோடு பெயர்ந்து, சாரத்துடன் சரிந்து விழுந்தது.
குடமுழுக்கை முன்னிட்டு, அவசரகதியில் தரமில்லாத பணிகளை மேற்கொண்டதால்தான் அலங்கார நுழைவு வளைவு இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

