சென்னை: திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
திருவாரூரில் இந்து முன்னணி தலைவர் ராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 2024ஆம் ஆண்டு பூம்பாறையில் தேசியப் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருடைய வங்கிப் பரிவர்த்தனைகள் ஆராயப்பட்டன.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை ஆறு மணி முதல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் உள்ள முகமது யாசின் என்பவரின் வீட்டில் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
வத்தலக்குண்டு காந்திநகர் விரிவாக்கப் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் மாமனார் உமர் கத்தாப் குடியிருக்கும் வீட்டிலும் தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரணைநடத்தியது. தேசியப் புலனாய்வு அமைப்பு துணை சூப்பரின்டென்டன்ட் சம்சுதீன் தலைமையிலான அதிகாரிகளும் திண்டுக்கல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
அதேபோல், திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, பேகம்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்துவருகிறது.