மது வணிகத் திட்டங்கள் அல்ல, மதுவிலக்கே வேண்டும்: அன்புமணி

மது வணிகத் திட்டங்கள் அல்ல, மதுவிலக்கே வேண்டும்: அன்புமணி

2 mins read
bdf0306e-a101-45a6-bf09-d1f428962529
மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகத் திரு அன்புமணி கூறினார். - படம்: அன்புமணி/எக்ஸ்

சென்னை: மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களைத் தமிழக அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், மாநிலம் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என்று திரு அன்புமணி குறிப்பிட்டார்.

தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொதுச் சுகாதாரத்துறை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தைசாமியும் மது விற்பனை தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தமிழ்நாட்டில் 1971ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் மதுவிற்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது,” என்று மருத்துவர் குழந்தைசாமி எச்சரித்திருந்தார்.

மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட திரு அன்புமணி, மது அருந்துபவர்களுக்கு ஏழு வகையான புற்றுநோய்களும் கல்லீரல் பாதிப்பு, நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படும் ஆபத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

“முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்டபோது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

“ஆனால், ‘ரெஸ்டோ பார்’களைத் திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளைத் தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அந்த நம்பிக்கையைக் குலைத்துவிட்டன,” என்று திரு அன்புமணி வருத்தம் தெரிவித்தார்.

“தமிழ்ச் சமூகத்தைச் குடிகாரச் சமூகமாக மாற்றிவிடக் கூடாது. எனவே, மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்