சென்னை: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காய் நகர்த்தி வரும் அதிமுக எடப்பாடி பழனிசாமி, அதற்காக பாஜகவுடன் மீண்டும் கூட்டு சேர்ந்திருக்கிறார்.
மேலும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதிமுக கூட்டணிக்கு விஜய்யை அழைத்து வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்பியதால், விஜய் தரப்பில் இருந்து மூன்று முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. விஜய் தரப்பில் எண்பது தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி கேட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என்பதை உறுதியாகக் கூறிவிட்டாராம்.
இந்த தகவலை அறிந்த திமுக வட்டாரம் உற்சாகமடைந்திருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி சற்றே நெருக்கடி கொடுத்தாலும், விஜய் வரவால் திமுகவின் வாக்கு வங்கி சரியும். அதே நேரத்தில் விஜய் பாஜகவை எதிர்த்துவிட்டு தற்போது கூட்டணியில் சேர்ந்துள்ளார் என விமர்சிக்கலாம். எது எப்படி இருந்தாலும் அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றாலும், செல்லாவிட்டாலும் தங்களுக்குத்தான் நல்லது என்கிறதாம் திமுக தரப்பு.

