சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பதற்கு பாஜக முயற்சி எடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைமை தெரிவித்துள்ளது.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் சிறிய கட்சிகளை எல்லாம் ஓரணியில் இணைக்க முயற்சி செய்வோம் என்று அமித்ஷா கூறினார்.
“பாஜகவுடன் 100% அல்ல, 1,000% கூட்டணி இல்லை என்பது உறுதி. அமித் ஷாவின் பதில் மற்ற கட்சிகளுக்கு வேண்டுமெனில் பொருந்திப் போகலாம். ஆனால், எங்களுக்கு அது பொருந்தாது,” என்று தவெக தலைமை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அண்மையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளதாகத் தமிழகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.