இருமொழிக் கொள்கை திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: தமிழக அரசு

இருமொழிக் கொள்கை திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: தமிழக அரசு

படம்: இந்து தமிழ் திசை

20 May 2026 - 2:55 pm

2 mins read

சென்னை: தமிழக அரசின் இருமொழிக் கொள்கை திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்தில் இந்திய அரசின் மறைமுக அழுத்தத்துக்கு தவெக தலைமையிலான அரசு நிச்சயமாக அடிபணியாது என்றும் தவெகவின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கைதான் என்றும் அவர் செவ்வாய்க்கிழமை (மே 19) செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி இந்திய அரசிடம் இருந்து வந்து சேரவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அந்த நிதி மாணவர்களுக்கானது என்பதை மறந்துவிடக்கூடாது என்றார். எனவே, எந்தக் காரணத்துக்காகவும் நிதி நிறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.

கல்விக் கொள்கையில் தவெக அரசாங்கம் எந்தவிதமான மறைமுக அழுத்தத்துக்கும் அடிபணியாது என அவர் தெளிவுபடுத்தினார்.

“கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. இருமொழிக் கொள்கை என்பது தவெக கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது,” என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.

பாஜக தலைமையிலான இந்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள தேசிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ என்ற பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது. பள்​ளி​களின் கட்​டமைப்பு வசதி​களை மேம்படுத்துவதே தனது இலக்கு என மத்திய அரசு கூறியது.

ஆனால், பிஎம்ஸ்ரீ திட்​டத்​தில் மும்​மொழிக் கொள்கை இருப்​ப​தால் திமுக தலைமையிலான முந்தைய தமிழக அரசு அதை ஏற்க மறுத்​து​விட்​டது. இதன் காரண​மாக, ஒருங்​கிணைந்த பள்​ளிக் ​கல்​வித் திட்​டம் மூல​மாக தமிழகத்​துக்கு தரவேண்​டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்​காமல் மத்​திய அரசு நிறுத்தி வைத்​தது.

இது அநீதி என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், பிஎம்ஸ்ரீ பள்​ளித் திட்​டத்​தின்​கீழ் பள்​ளி​களை மேம்​படுத்த உடனடி​யாக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று இந்திய அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்