சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் வேதிப்பொருள் கலந்த தர்ப்பூசணிப் பழங்கள் எங்கேயும் விற்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்ப்பூசணிப் பழங்களை வாங்கிச் சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இப்பழம் குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகளால் பொதுமக்களிடம் இதனைச் சாப்பிடுவது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
தர்ப்பூசணிப் பழங்கள் இயல்பாக இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். வேதிப்பொருள் கலந்த தர்ப்பூசணிதான் அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட விழிப்புணர்வுக் காணொளிதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார்.
தர்ப்பூசணி பழங்களைச் சாப்பிட மக்கள் தயங்குவதால், அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தர்ப்பூசணி, இப்போது ரூ.3 ஆயிரத்துக்கு கூட வாங்க யாரும் முன்வருவதில்லை.
இந்தச் சூழலில், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, இதுதொடர்பாக சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் வேதிப்பொருள் கலந்த தர்ப்பூசணி பழங்கள் (அடர் சிவப்பு பழங்கள்) கண்டுபிடிக்கப்படவில்லை.
“இயற்கையாகவே தர்ப்பூசணிக்கு என்று ஒரு நிறம் உள்ளது. இளம்சிவப்பு நிறத்தில் இல்லாமல், மிகவும் சிவப்பான நிறத்தில் இருந்தாலோ அல்லது சாப்பிடும்போது அதிகமாக சர்க்கரை போல் இனித்தாலோ அதில் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருக்கும்.
“ஒருசிலர் செய்யும் தவறுதான் இது. இதைத்தான் மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சென்னையைப் பொறுத்தவரை தர்ப்பூசணிப் பழங்கள் மிகவும் பாதுகாப்பானதாகவே இருக்கின்றன. பொதுமக்கள் பயமின்றி தர்ப்பூசணிப் பழங்களை வாங்கிச் சாப்பிடலாம்,” என்று அவர் தெரிவித்தார்.