சென்னை: ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு, கடந்த நான்கு ஆண்டுகளாகச் சபாநாயகராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்தப் பதவியிலிருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தைச் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அதிமுக) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். அந்தத் தீர்மானம் குறித்து திங்கட்கிழமை (மார்ச் 17) விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம்மீது குரல் மற்றும் டிவிசன் என இரண்டு முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. டிவிசன் முறையில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் விழுந்தன. இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது.