இனி எந்தக் குடும்பமும் இதுபோல் பாதிக்கப்படக் கூடாது: ஜெயராஜ் மகள் பெர்சிஸ் உருக்கம்

இனி எந்தக் குடும்பமும் இதுபோல் பாதிக்கப்படக் கூடாது: ஜெயராஜ் மகள் பெர்சிஸ் உருக்கம்

2 mins read
சாத்தான்குளம் வழக்கில் நீதி
9efcabd4-32b9-4ba9-bb09-33c99354c668
செய்தியாளர்களிடம் மனமுடைந்து பேசிய, மறைந்த ஜெயராஜின் மகளும் பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிஸ் தனது உறவினருடன். - படம்: ஏபிபி லைவ்
multi-img1 of 2

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது காவலர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறைந்த ஜெயராஜின் மகளும் பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிஸ் செய்தியாளர்களிடம் மனமுடைந்து பேசினார்.

ஆறு ஆண்டுகாலப் போராட்டம்

2020ஆம் ஆண்டு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட தனது தந்தையும் தம்பியும் காவல்துறையினரால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், கடந்த ஆறு ஆண்டுகாலமாகத் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போராடியதாகத் தெரிவித்தார்.

துயர்மிகுந்த இந்தக் காலகட்டத்தில் தங்களுக்கு ஆதரவாக இருந்த உள்ளூர் மக்கள், நீதி கிடைக்கப் போராடிய பொதுமக்கள், செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பாமர மக்களுக்கான நீதி

“நீதிமன்றத்தால் இப்போது கிடைத்துள்ள இந்த நீதி, எங்களைப் போன்ற எல்லா எளிய மக்களுக்கும் கிடைத்த நீதி,” என்று அவர் குறிப்பிட்டார்.

இழந்த உயிர்கள் மீண்டும் உயிர்பெறப் போவதில்லை என்றபோதிலும், இதுபோன்ற ஒரு கொடூரமான துன்பம் இனி வேறெந்தக் குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கைத் தொடர்ந்து உறுதியாக நடத்தினோம் என்றார்.

இனி வரும் காலங்களில் ‘காவல் நிலைய மரணங்கள்’ என்பதே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி

கடந்த 2020ல் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலைய விசாரணையின் பேரில் மரணமடைந்தனர்.

இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்ட 10 காவலர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட எஞ்சிய ஒன்பது பேருக்கும் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பெர்சிசும் அவரது குடும்பத்தினரும் முழுமையாக வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்