திண்டுக்கல்: கூட்டணி வைத்தாலும் யாருக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க இயலாது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருப்பது, திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுகவும் அதிமுகவும் பெரிய கட்சிகளாக இருந்தாலும்கூட கூட்டணியின்றி அக்கட்சிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை என்றும் திமுக ஆட்சிதான் நடந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
“இதுவரை நாங்கள் யாருக்கும் ஆட்சியில் பங்கு வழங்கியதே கிடையாது. எத்தனை கட்சிகள் வந்தாலும் கூட்டணி வைத்துக்கொள்வோம். தேர்தலில் அதிக இடங்கள் கேட்டால் அதை ஒதுக்குவோம். ஆனால் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை,” என்றார் ஐ.பெரியசாமி.
இந்நிலையில் திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் தேர்தலை தனித்து எதிர்கொண்டு ஆட்சி அமைப்பது இனி சாத்தியமில்லை என்று கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் வெற்றிக்கு கூட்டணியைப் பயன்படுத்துகின்றனர். ஆட்சி அமைக்கும்போது மட்டும் தனி ஆட்சி முறையை மேற்கொள்கிறார்கள்.
“புதிதாக வந்துள்ள கட்சிகள்கூட கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்கிறார்கள். எனவே, புது கட்சிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,” என்று பாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.


