திருப்பூர்: திருப்பூரில் பணிபுரியும் பெரும்பாலான வடமாநில ஊழியர்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் அங்கு கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
திருப்பூரில் இயங்கி வரும் ஆயத்த ஆடை நிறுவனங்கள், நூற்பாலைகள் மட்டுமின்றி, கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள், உணவகங்களுடன் அண்மைக்காலமாக விவசாயப் பணிகளிலும் பல்லாயிரக்கணக்கான வடமாநில ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்குப் பெருமளவில் பணியாற்றுகின்றனர். உள்ளூர் ஊழியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாகப் பல நிறுவனங்கள் இவர்களையே முழுமையாகச் சார்ந்து இயங்கி வருகின்றன.
வடமாநிலங்களில் தீபாவளித் திருநாள் ஐந்து நாள்கள்வரை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தங்கம், பாத்திரங்கள் வாங்குவது, வீடுகளை அலங்கரித்து லட்சுமி பூஜை செய்வது, கோவர்த்தன பூஜை, உடன்பிறப்புகளைக் கொண்டாடும் ‘பாய் தூஜ்’ எனத் தொடர்ந்து சடங்குகள் நடைபெறும்.
குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் இது 20 நாள்கள் வரை நீடிக்கும். ஆண்டு முழுவதும் உழைப்பதே தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடத்தான் என்ற நோக்கில் ஊழியர்கள் ஊர் திரும்பியுள்ளனர்.
பண்டிகை முடிந்த பின்னரும் அவர்கள் பணிக்குத் திரும்பப் பல வாரங்கள் ஆகும் என்பதால், திருப்பூரில் தொழில் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வெளிமாநில ஊழியர்களை மட்டுமே முற்றிலும் நம்பியிருக்காமல், உள்ளூரிலேயே போதிய திறன்மிகு ஊழியர்களை உருவாக்குவதற்கான திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
