சென்னை: தமிழகத்தின் சென்னை மாநகரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானத் தளங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெள்ளம் ஏற்படாமல் தடுக்க, அவ்விடங்களில் 603 நீர் இறைப்பிகள் (pumps) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாண்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலிருந்து தொடங்கவுள்ளது. இதற்கிடையே, சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.
மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் 292, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 151, மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 160 என நீர் இறைப்பிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலமாக, மழைக்காலத்தின்போது ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழக நீர்வளத்துறை, தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆகியவை இணைந்து தொழில்நுட்பக் குழுவை அமைத்துள்ளன.
சென்னையில் கடந்த ஆண்டு 27 இடங்களில் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாண்டிலும் அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.