சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இதுவரை இயல்பான அளவைவிட 35 விழுக்காடு கூடுதல் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, மாநிலம் முழுவதும் பரவலாகப் பெய்து வருகிறது.
குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தென்மாவட்டங்களிலும் வழக்கத்தைவிட பலத்த மழை பெய்து வருகிறது. அக்டோபர் 1 முதல் இதுவரை வழக்கமாக 16.56 சென்டிமீட்டர் மழை பதிவாக வேண்டிய இடத்தில், தற்போது 21.79 சென்டிமீட்டர் வரை மழை பொழிந்துள்ளது.
மாநிலத்தின் முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இயல்பைவிடக் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.
கோவையில் வழக்கத்தைவிட 101 விழுக்காடு கூடுதல் மழை (31.34 செ.மீ.) பெய்துள்ளது.
திருவள்ளூரில் 79 விழுக்காடு கூடுதல் மழை (25.87 செ.மீ.) பதிவான நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பைவிட 74 விழுக்காடு கூடுதல் மழை (32.8 செ.மீ.) பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, இயல்பான 26 செ.மீ. அளவைக் காட்டிலும் 29.6 செ.மீ. மழை பெய்துள்ளது.
அதேவேளையி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒப்பீட்டளவில் மழை சற்று குறைவாகவே பெய்துள்ளது.
கடந்த சில நாள்களாக மழை சற்றே ஓய்ந்திருந்த நிலையில், சென்னையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் காற்றில் ஈரப்பதம் காரணமாக புழுக்கமும் மிகுந்து காணப்படுகிறது.
