தேனி: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், என்றும் தனக்கு பதவி ஆசை இல்லை என்றும் அமமுக சார்பில் போட்டியிடுபவர்கள் அமைச்சரவை ஏற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.
“இது தனிப்பட்ட அரசியல் லாபத்திற்கான முடிவு அல்ல. தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானம்,” என்றார் அவர்.
தற்போதைய திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், தமிழகத்தில் எந்தத் துறையை எடுத்தாலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது என்றும் கூறினார். மாநிலம் இன்று ஒரு கொள்ளை நாடாக மாறி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் நலனுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், இலவச மடிக்கணினி போன்ற பல முக்கிய திட்டங்களை திமுக அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளதாக அவர் கூறினார்.
ஊழலுக்காகவே வாழ்பவர்களை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நோக்கத்துடனேயே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அணி இணைந்துள்ளதாகவும் தினகரன் சொன்னார்.
தமிழகத்தை பிரதமர் மோடி தத்தெடுத்து நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக மாற்றுவார் என்ற உறுதியான நம்பிக்கை தமக்கு இருப்பதாக கூறினார்.
தினகரனின் அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

