சென்னை: நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 22ஆம் தேதியன்று, பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் வரவேற்புரை ஆற்றிய ஸ்டாலின், இது எண்ணிக்கை குறித்து விவாதிக்கும் கூட்டமல்ல என்றும் அதிகாரத்தைப் பற்றியது என்றும் குறிப்பிட்டார்.
கூட்டுக்குழுக் கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்களும் கர்நாடக மாநில துணை முதல்வரும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறைச் செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என திமுக தொடர்ந்து கூறி வருகிறது.
இக்கருத்துடன் ஒத்துப்போகும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படவும் அக்கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு அமைத்து செயல்படுவது தொடர்பாக ஏழு மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகத்தைக் காக்க பல்வேறு கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வானது, இந்திய கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் என்றார் ஸ்டாலின்.
தொடர்புடைய செய்திகள்
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“இது எண்ணிக்கை பற்றியதல்ல, அதிகாரம் பற்றியது. மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால், சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக நம்மை மாற்றிவிடும்.
“தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இது தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல, நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சி,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை என்றும் மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாகவே பாஜக எப்போதும் இருந்து வருகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“மாநில உரிமையை நிலைநாட்ட தொடர் நடவடிக்கை அவசியம். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் தான் வெற்றி பெற முடியும். எந்தச் சூழ்நிலையிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. குறையவும் விடக்கூடாது,” என்றார் ஸ்டாலின்.
முக்கியமான எதிர்க்கட்சியான, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் அணிவகுக்க தொடங்கி இருப்பது, பாஜக தலைமைக்கு புதுச் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

