கோவை: நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உட்பட ஒன்பது பேர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) கோவைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் வாகனம் வருவதற்கு முன்பாகக் கார்த்திகா தொண்டர்களுடன் வாகனப் பேரணியாக வந்தார்.
பாதுகாப்புக் கருதி மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்திய காவல்துறையினருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தை கார்த்திகா தலைமையில் நாதகவினர் முற்றுகையிட்டனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 20ஆம் தேதி கோவையில் கார்த்திகாவைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதிகாலை நேரத்தில் கார்த்திகாவைக் கைது செய்த காவலர்கள், இரவு உடையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றது குறித்து விமர்சனம் எழுந்தது.
அவர் உட்பட நாதகவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கார்த்திகாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
கைதான 12 பேரும் பிணை கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி, கார்த்திகாவுக்கும் அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் பிணை வழங்கினார்.
வெள்ளிக்கிழமை கோவை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் நாதக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
