சென்னை: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதவியை அளித்த ஜெயலலிதாவுக்கு தாம் எவ்விதத் துரோகமும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், மூன்றாவது முறையாக தம்மை ஒரு தரப்பினர் கட்டாயப்படுத்தி முதல்வராக்கியதாகக் குறிப்பிட்டார்.
அதிமுகவின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தைத் தாம் தொடங்கியதாகவும் அரசியல் பிரமுகர் ஒருவரது அறிவுறுத்தலின் பேரிலேயே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் தாம் போட்டியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“கட்சிக்குச் சோதனை வந்தபோது ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று இரண்டு முறை முதல்வரானேன். அவர் பல்வேறு வகையிலும் எனக்கு நற்சான்று கொடுத்தார்.
“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராவதில் எனக்கு அறவே விருப்பமில்லை என்றேன். ஆனால் கட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள்,” என்றார் ஓ.பன்னீர்செலவம்.
இதையடுத்து, ‘அதிமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘மதியாதார் வாசல் மிதியாதே’ என்று ஔவையார் கூறியதே தம் பதில் என்றார் ஓபிஎஸ்.

