கோத்தகிரி: கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாட்சியரிடம் விடிய விடிய விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து திடீரென வட்டாட்சியர் அலுவலகத்தில் உதகை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பரிமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், வட்டாட்சியர் கோமதியின் வங்கிக் கணக்குக்கு யுபிஐ மூலமாக சுமார் ரூ.6 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.