நான்கு நாள்களில் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு: பழனிசாமி

நான்கு நாள்களில் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு: பழனிசாமி

2 mins read
b24700ae-d599-4d63-bc79-c93fcc0618cb
எடப்பாடி பழனிசாமி. - படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசிய அவர், பின்னர் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அடுத்த நான்கு நாள்களில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவடையும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தவெக ஆகிய இரு கட்சிகளும் தனித்துக் களம்காண்கின்றன.

திமுக அணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.

அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. மேலும், தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு ஆருடத் தகவல்களும் வெளிவந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தவெகவுடன் கூட்டணி குறித்து எந்தவிதப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.

பாஜக அணியில் எந்தெந்த தொகுதியில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக தற்போது விரைவு ரயில்போல் வேகமாகச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இதுவரை மூன்று முறை தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் மீண்டும் அவர் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வர இருப்பதாகவும் திரு பழனிசாமி கூறினார்.

“கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இனி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தேர்தலை நோக்கி விரைவாக பயணம் மேற்கொள்வோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்