திட்டமிட்டு பிரசாரத்துக்கு இடையூறு செய்யும் அதிகாரிகள்: விஜய் புகார்

திட்டமிட்டு பிரசாரத்துக்கு இடையூறு செய்யும் அதிகாரிகள்: விஜய் புகார்

3 mins read
8229371f-593f-492d-bc68-46c8ee1b5399
தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து மனு அளிக்க வந்த தவெக தலைவர் விஜய். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தவெக சார்பில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் விஜய், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

அதிகாரிகள் சிலர், திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் திட்டமிட்டே தமது பிரசாரத்துக்கு இடையூறு செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் விஜய்.

முன்னதாக, சனிக்கிழமை (மார்ச் 28) அவர் திடீரென தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து தமது புகார் மனுவை அளித்தார்.

தவெக சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சியை நடத்த இயலவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் முல்லை நகர் பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கவும் விஜய் திட்டமிட்டிருந்தார். பிரசாரக் கூட்டத்தில் 3,000 பங்கேற்பர் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குறிப்பிட்ட அப்பகுதியில் அதிகபட்சம் 300 பேர் மட்டுமே நிற்க முடியும் என்பதைக் காரணமாகக் கூறி, பிரசாரத்துக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதற்கு தவெக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

“கூட்டம் நடைபெற இருந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் திடீரென பள்ளம் தோண்டப்பட்டு, இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

“நான் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும்போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணம் கூறி அனுமதி தர தாமதிப்பதும் அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. திமுக அரசு திட்டமிட்டு எனது பிரசாரத்தை முடக்குகிறது,” என்று சாடியுள்ளார் விஜய்.

இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டி

தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

சென்னையில் உள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) வெளியானது.

இதையடுத்து, வேட்பாளர்களை கட்சித் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விஜய், இரு தொகுதிகளில் களமிறங்கும் நிலையில், தவெக பொதுச் செயலாளர் சென்னை தி.நகர் தொகுதியிலும் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையத்திலும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய விஜய், எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்றார்.

இந்தத் தேர்தலில் தீய சக்தியான திமுகவின் மக்கள் விரோத ஸ்டாலினா அல்லது விஜய்யா என்பதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

“இது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல, மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் என சொல்லுவார்கள். ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்றால், அனுபவத்தை வைத்து கொள்ளையடிக்காதவராக, சட்டவிரோத மணல் குவாரி வைத்திருக்காதவராக, கேள்வி கேட்கும் செய்தியாளர்களைத் தாக்காதவராக இருக்க வேண்டும்,” என்றார் விஜய்.

இது பாமரர்களுக்கும் ஒரு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் செய்யும் அடிமைகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்றும் இது மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்பதற்கான தேர்தல் என்றும் குறிப்பிட்ட விஜய், தமிழகத்தின் எதிர்காலத்துக்காக தவெகவுக்கு ஒரு வாய்ப்புத் தரவேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்